மனிதர்களால் அழியும் இயற்கை : ஐ.நா அறிக்கை
மனிதர்கள் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளால் இயற்கை இதுவரை இல்லாத வகையில் மோசமாக பாதிப்படைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள 1800 பக்க அறிக்கையில், சுற்றுச்சூழல் மற்றும் அரிய வகை உயிரினங்களை பாதுகாக்க, மனிதர்களின் நடத்தையை மாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்க உலக நாடுகள் முன்வரவேண்டும் என்று கூறியுள்ள ஐநாவின் அறிக்கை, மனிதர்கள் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை புறந்தள்ளிவிட முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கங்களின் சிறப்பான கொள்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத தொழில்நுட்பத்தை கடைபிடித்தால் அழிவின் பாதிப்பில் இருந்து இயற்கையை காபாற்றும் வழிகளாகவும் கூறப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, மனிதர்கள் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளால் 10 லட்சம் விலங்குகள், மரங்கள் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காடுகள் அழித்தல், பருவநிலை மாற்றத்தை அனுமதித்தல், அதிகளவில் மீன்பிடித்தல், நிலப்பரப்பையும் நீரையும் மாசாக்குவது, ஆகியவை சுற்றுச்சூழல் அழிவு நிலையை நோக்கி செல்வதற்கான முக்கிய காரணிகளாக ஐநா சுட்டிக்காட்டியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 80 கோடி கிலோ உலோகங்கள், நச்சு கழிவுகள் உள்ளிட்டவை கடல், ஆறு போன்ற நீர்நிலைகளில் கலப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக, பவளப் பாறைகள் அழிவை குறிப்பிட்டுள்ள ஐநா, தற்போதைய சூழலில் வெயில் 1 டிகிரி உயர்ந்தால் கடல்பாசிகள் மற்றும் பவள பாறைகள் 90 விழுக்காடு பாதிக்கப்படையும் என்றும் ஒரு டிகிரிக்கு மேல் உயர்ந்தால் பவள பாறைகள் 99 விழுக்காடு காணாமல் போகும் சூழல் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளது .
கடல் வளத்தை அழிக்கும் முக்கிய காரணியாக மீன்பிடித்தொழிலை சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா., உலகில் உள்ள கடல்களின் 55 சதவிகித பகுதிகளில் மீன்பிடி கப்பல்கள் இயங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இதுவரை மீன்கள் மற்றும் சுறாக்கள் 3-ல் ஒரு பங்கு அழிக்கப்பட்டுள்ளதாக இயற்கை பாதுகாப்பு அமைப்பு கணக்கிட்டுள்ளது.
உணவு வீணாவதை தடுத்தல், தற்போதைய அவசர, அவசியம் என்று கூறியுள்ள ஐநா, சாலை விரிவாக்கம் செய்வதால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ்.நீயூஷ்18.கொம்